சென்னை: செல்லப்பிராணிகளின் பராமரிப்பு மையங்களுக்கென தனி விதிமுறைகளை வகுக்ககோரிய மனுவை 8 வாரங்களில் தமிழ்நாடு அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளெமென்ட் ரூபின் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர் விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூருக்கு செல்லும்போது அவற்றை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி செல்லப்பிராணிகளை சேர்த்து செல்கின்றனர்.
இதுபோல நாட்டில் முறைப்படுத்தப்படாத செல்லப்பிராணிகளின் பராமரிப்பு மையங்கள் இயங்கி வருவதாகவும், முறையான தகுதி இல்லாத பராமரிப்பாளர்களை கொண்ட மையங்களில் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படாததால் சில நேரங்களில் அவை உயிரிழக்க நேரிடுவதாகவும், இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் இது போன்ற மையங்களை முறைப்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு 2018ம் ஆண்டு விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அதனை பின்பற்றி தமிழ்நாட்டில் செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்துவதற்கு தனி விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.