சீர்காழி: சீர்காழி அருகே முன் விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டில் இருந்த எஸ்ஐ காயமடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கணேசன் (58). திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணேசன் வீட்டில் இருந்தபோது அதே தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கலைவேந்தன் (28) என்பவர் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார். அந்த பெட்ரோல் குண்டு வீட்டின் நிலையில் பட்டு வெடித்து சிதறியுள்ளது. அப்போது வீடுமுழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதில் எஸ்எஸ்ஐ கணேசன் லேசான காயத்துடன் தப்பினார்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை திருவெண்காடு காவல் நிலையத்தில் கலைவேந்தன் சரணடைந்தார். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக கணேசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கலைவேந்தனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.