புதுக்கோட்டை: கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த பாஜ சதி செய்வதாக அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. அதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடவில்லை. இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. நாங்கள் இந்த மாதிரியான அசம்பாவிதங்களை தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்பதற்காக வேறு யாரோ செய்திருக்கக்கூடிய சதி செயலாக தான் இது இருக்க வேண்டும். கவர்னர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை என்று சொல்வது முழுக்க முழுக்க தவறான ஒன்று. தமிழ்நாடு முதலமைச்சர் எதிரியாக இருந்தாலும், பாதுகாக்க கூடிய தலைவராக தான் இருப்பார்.
கவர்னர் மாளிகை புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவர்னர் மாளிகை, எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜவால் காலே வைக்க முடியவில்லை. அவர்கள் தலைகீழாக நின்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. எதையாச்சும் வைத்து அரசியல் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். அதேபோல் தான் இதை வைத்தும் அரசியல் செய்தாலும் தமிழ்நாடு மக்களிடத்தில் இது எடுபடாது. இதில் உள்ள உண்மையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்து உள்ளது. ஏற்கனவே பாஜ அலுவலகம் முன்பு இதேபோல் தாக்குதல் நடத்தி இருக்கும் வினோத்தை, பாஜ வழக்கறிஞரே பிணையில் எடுத்து உள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுப்படுத்தி இருக்கிறது’ என்று கூறி உள்ளார்.