புதுடெல்லி,நவ.28: கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்து மக்களிடம் இருந்து ரூ.36 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை பற்றி காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் ரூ. 36 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பதிவில்,’மோடி அரசின் கொள்ளை அம்பலமானது. நான் கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்தது. பெட்ரோல், டீசல் விலையில் வரி/செஸ்/வரி விதித்ததன் மூலம், ஒன்றிய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சம்பாதித்தது 36,58,354 கோடி ரூபாய். இந்த எண்ணிக்கையை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ரூ36 லட்சம் கோடிக்கு மேல். 2014 மே முதல் தற்போது வரை கச்சா எண்ணெய் விலை 32 சதவீதம் குறைந்துள்ளது.
இன்றைய விலை பீப்பாய்க்கு 73 அமெரிக்க டாலர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.64.44 , டீசல் லிட்டர் ரூ.59.61க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய டெல்லி விலை என்ன?. பெட்ரோல் – ரூ.94.77, டீசல் ரூ.87.67. திருதராஷ்டிரா மோடி அரசால் பணவீக்கத்தை பார்க்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டை, மறுபதிவிட்ட கார்கே கூறுகையில்,’ பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரி, வரி, செஸ் ஆகியவற்றை விதித்து, சாமானியர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு ரூ. 36 லட்சம் கோடிக்கு மேல் மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து வசூலித்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரைக் கொள்ளையடிக்க மோடி அரசு ஒப்பந்தம் எடுத்தது போல் தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.