சென்னை: கல்பாக்கம் அருகே கூவத்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (50). இவர், கூவத்தூர் அருகே உள்ள காத்தான்கடை இசிஆர் சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்துள்ளார். மேலும், இவர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டதால் அனைவரிடமும் இனிமையாக பழகக்கூடியவர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது பெட்ரோல் பங்க்கிற்கு வந்து பைக்கில் மீண்டும் வீடு திரும்பும் வழியில், ஒதுக்குப்புறமான இருள் சூழ்ந்த இடத்தில் திடீரென வேகமாக வந்த ஒரு கார், இவரது பைக்கை இடைமறித்து நின்றுள்ளது. உடனே அந்த காரிலிருந்து அரிவாளுடன் இறங்கி ஓடி வந்த 3 பேர் மோகன்ராஜை சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி சென்றனர்.தகவலறிந்த கூவத்தூர் போலீசார் தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடி, துடித்த மோகன்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூவத்தூர் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள், பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கம் என்றால் அவர் பைக்கில் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் அப்படியே இருந்துள்ளது. எனவே, வேறு ஏதாவது முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி கொலை செய்யப்பட்ட மோகன்ராஜியின் உறவினர்கள் மற்றும் வியாபாபாரிகள் சங்கத்தினர் அங்குள்ள கிழக்கு கடற்கரையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.