வேளச்சேரி: பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (31). பள்ளிக்கரணை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு பவானி அம்மன் கோயில் தெரு வழியாக மது போதையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரில் அதே பகுதியை சேர்ந்த ஜோஸ்வா மற்றும் பிரவீன் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் மீது இடிப்பது போல் ஹரிபிரசாத் சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது.இதையடுத்து நேற்று முன்தனம் காலை ஹரிபிரசாத்தின் தாய் பழனியம்மாள், ஜோஸ்வா வீட்டிற்கு சென்று தன் மகனுடன் தகராறு செய்தது குறித்து கேட்டு, சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன், ஷியாம், அரவிந்த், பிரசன்னா, சிவா ஆகியோர் நேற்று முன்தனம் மாலை ஹரிபிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், தயாராக கொண்டு வந்த 3 பெட்ரோல் குண்டுகளை ஹரிபிரசாத் வீட்டின் மீது வீசியுள்ளனர். சத்தம் கேட்டு ஹரிபிரசாத் மற்றும் இவரது நண்பர் மடிப்பாக்கத்தை சேர்ந்த தீபக் (28) ஆகியோர் வெளியில் வந்து பார்த்தபோது, அரிவாளால் இருவரையும் சரமாரி வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதில் ஹரிபிரசாத்தின் வலது கை சுண்டு விரல் மற்றும் மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தீபக்கின் இடது மணிக்கட்டு, முதுகில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர்.