பழநி: பெட்ரோல் குண்டு வீசி கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே அழகாபுரியை சேர்ந்தவர் விஜயா (38). கட்டிட தொழிலாளி. கணவர் பிரிந்து சென்று விட்டதால் 2 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் மகள்களுடன் விஜயா தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்மநபர் கதவை தட்டியுள்ளார். தூக்க கலக்கத்துடன் கதவை திறந்தபோது வாசலில் நின்றிருந்த மர்மநபர் அவர் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார்.
இதில் விஜயா உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து பழநி தாலுகா போலீசார், விஜயாவிடம் விசாரித்தனர். இதில் விஜயாவுக்கும், ஒட்டன்சத்திரம் அருகே குப்பாயிவலசுவை சேர்ந்த கட்டிட தொழிலாளி குப்புச்சாமிக்கும் (36) தகாத உறவு இருந்தது தெரிந்தது. சம்பவத்தன்று தன்னை கொலை செய்யும் நோக்கில் அவர் பெட்ரோல் குண்டு வீசியதாக விஜயா தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து குப்புச்சாமியை தேடி வந்தனர். இதற்கிடையே, விஜயா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்து, பழநி அருகே வண்டிவாய்க்கால் பகுதியில் பதுங்கியிருந்த குப்புச்சாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் விஜயா, வேறு சில நபர்களுடன் பழகி வந்ததை குப்புச்சாமி கண்டித்தும் கைவிடாததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்துள்ளது.