Thursday, February 22, 2024
Home » எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பா?.. அடுத்த மாதம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு

எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பா?.. அடுத்த மாதம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு

by Neethimaan

புதுடெல்லி: எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13, டீசல் லிட்டருக்கு ரூ.16 குறைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 2022, ஏப்ரல் மாதம் முதல் விலையை உயர்த்தவில்லை. கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-24-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்திருக்கிறது.

கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்திருக்கிறது. இதுபற்றிய தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. இந்நிலையில் தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

13 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi