புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மீண்டும் மீண்டும் உயர்த்தியதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பொதுமக்களிடமிருந்து ரூ.32 லட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசு வசூலித்துள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் வரை அதாவது லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை ஒன்றிய அரசால் குறைக்க முடியும். ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு தராமல் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஆய்வு நிறுவனமான கிரிசில் அறிக்கைப்படி, அரசு நடத்தும் 3 எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம். கடந்த ஆண்டு இந்நிறுவனங்கள் ரூ.33,000 கோடி லாபம் ஈட்டி உள்ளன. இதே போல தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. பாஜ அரசின் ஆட்சியில் சராசரியாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 65 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 70-80 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் மீதான வரியை மீண்டும் மீண்டும் உயர்த்தியதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் பொதுமக்களிடமிருந்து ரூ.32 லட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு பணவீக்கத்தில் நாட்டை ஒன்றிய அரசு பாழாக்கி உள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்தால், உணவுப் பொருட்களின் விலை தானாகவே குறையும். இது ஒட்டுமொத்த நாட்டிற்கு சிறந்த நிவாரணத்தை தரும். இவ்வாறு கூறி உள்ளார்.