கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 17 வயது மதிக்கத்தக்க பெண் யானை, கடந்த மாதம் 20ம் தேதி உயிரிழந்தது. அந்த யானைக்கு உடற்கூராய்வு செய்த போது, அதன் வயிற்றில் சுமார் 5 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் வனப்பகுதிக்கு அருகே இருந்த சோமையம்பாளையம் ஊராட்சியின் குப்பைக்கிடங்கு மூடப்பட்டது. குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்டுள்ள அப்பகுதியில், குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்க பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வனப்பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினரும் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நரசிம்மநாய்க்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் பகுதியில் மலையடிவாரத்தை ஒட்டிய வனப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில், பரவலாக பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றுச்சூழலும், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:
பூச்சியூர் மலையடிவார பகுதியில் தனி நபர்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்பும் அப்பகுதியில் குப்பை கொட்டி வருகிறது. இப்பகுதியில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் குப்பையில் கிடக்கும் கழிவு உணவு பொருட்களையும், அவற்றோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் வனவிலங்குகள் சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகளின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, மருதமலை அடிவாரத்தில் குப்பைக்கிடங்கில் உணவு தேடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. தொடர்ந்து இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டால், அதேபோன்ற சம்பவங்கள் இங்கும் நடக்க வாய்ப்புண்டு. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.