கம்பம்: திருமணத்திற்கு 5 நாட்கள் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட யூடியூபரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஊத்துகாடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் ராஜ்குமார் (27). இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கும், கம்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வரும் 5ம் தேதி கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழை ராஜ்குமார் கொடுத்து வந்தார். மேலும் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர்.வழக்கம் போல் நேற்று காலை நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்நிலையில், காலை 10 மணிக்கு கூடலூர் சாலையில் உள்ள கம்பம் நகராட்சி உரக்கிடங்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில், மோட்டார் சைக்கிளின் அருகில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் ராஜ்குமார் கிடப்பதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் விரைந்து சென்று ராஜ்குமாரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை துவங்கு முன்னரே அவர் பரிதாபமாக இறந்தார்.இந்தச் சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்தது உறுதியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று நண்பர்களிடம் திருமண அழைப்பிதழ் வழங்க வருவதாக ராஜ்குமார் கூறியுள்ளார். மேலும் நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறவில்லை. கடைசியாக மணப்பெண்ணிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர்கள் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. மணப்பெண் அழுதுகொண்டே இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.நேற்று காலை 8.30 மணிக்கு உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் “கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ? இந்த உலகில் இன்று தான் என் முகத்தை பார்க்கிறேன். கண்ணிலே ஈரம் சேருதே, கல்லையும் காலம் மாற்றுதே” என பதிவிட்டுள்ளார். எதன் அடிப்படையில் இப்படி பதிவிட்டார் என்பது குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.