வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா தென்னேரி அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதில், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர், வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சோபா யோகானந்தம், அறங்காவலர் பொறுப்பு பூபாலன், கோயில் செயல் அலுவலர்கள் திலகவதி, ராஜமாணிக்கம், மற்றும் தென்னேரி, அகரம், மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு களித்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த புலிக்குன்றம் கிராமத்தில் சுஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் இக்கோயில், நேற்று காலை கோபுர விமான கலசத்திற்கும், மூலவ மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இக்கும்பாபிஷேகத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.