Sunday, April 27, 2025
Home » மகத்தான வாழ்வருளும் மச்சாவதாரப் பெருமாள்

மகத்தான வாழ்வருளும் மச்சாவதாரப் பெருமாள்

by Porselvi

பகவான், நரசிம்மமாக தூணைப் பிளந்து தோன்றினான். வராகமாக ஆழ்கடலில் கர்ஜித்து பூமியை மூக்கின் மீது நிறுத்தி சுழற்றினான். வேறொரு யுகத்தில் பாற்கடலை கடையும் போது கூர்மமாக மலையைத் தாங்கினான். அங்கேயே தன்வந்திரியாக அமிர்தத்தை ஏந்தினான். வாமனனாக மூவுலகத்தையும் அளந்தான். அதில் மச்சாவதாரம் உலகமே இல்லாத காலத்தில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.

விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தில் பிரளய காலத்தில் திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி, நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும் போது, கையில் ஒரு சிறு மீன் தென்பட்டது. அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், மீனை மீண்டும் நீரில் விட முயலும்போது, மீன், ‘‘மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள்.

பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டியது. அதன்படி முனிவர் அந்த மீனைத் தன் கமண்டலத்தில் போட, சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது. பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது. பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார். அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டு போய்விட முயலும் போது, ‘‘மகரிஷியே இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே” என்று கேட்டது. அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர், அவரிடம், “தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?” என்று கேட்டார்.

“மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப்போகின்றன. அச்சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். பிரம்மனின் உறக்கம் முடியும் வரை மச்ச உருவில் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

ஏழாவது நாளில், பெரிய பிரளயம் ஏற்பட, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது. மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, வாயுவால் ஓடம் அலைக்கழிக்கப்பட்டது. மச்ச மூர்த்தி தோன்றி படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார். பிறகு, மகாவிஷ்ணு மகரிஷிக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார்.

அசுரர்களுக்கு தன்னை ஆள யாருமில்லை என்ற அகங்காரம் தெய்வத்திடமே தோன்றுவதுண்டு. அப்படி அகங்காரமாக நினைத்த ஹயக்ரீவன் பிரபஞ்சம் முழுதும் பிரளய நீரினால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான். நம்மை இதுவொன்றும் செய்யவில்லையே என ஆச்சரியமாகப் பார்த்தான். இனி நாம்தான் எல்லாவற்றையும் ஆள வேண்டுமோ என்று சிரித்துக் கொண்டான். யார் அந்த பிரம்மன் உலகத்தை படைப்பது. வேதங்கள் பிரம்மாவிடம் இருந்தால் என்ன, என்னிடம் இருந்தால் என்ன? வேதங்களை வைத்துக் கொண்டு நானே படைத்துக் கொள்கிறேன். முதலில் அந்த மகாவிஷ்ணுவை பார்த்து வருகிறேன் என்று அசுரன் பிரளய நீரை கிழித்துக் கொண்டு வைகுந்தம் வந்தான்.

வைகுந்தத்தின் வாயிலை அடைந்தான். ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷன் நான்கு திசைகளிலும் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மூச்சுக்காற்றின் அதிர்வைக் கூட தாங்க முடியாது பின் தங்கினான். மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து சென்ற கொடியின் உச்சியில் பிரம்மா இருப்பதை கண்டான். பிரம்மனின் கைகளில் வேதங்கள் இருந்ததைப் பார்த்தான். எப்படியேனும் அதைக் கவர்ந்து விட வேண்டுமென வெகு உயரத்தில் பறந்தான். அந்தரத்தில் மிதந்தபடி பிரம்மனிடமிருந்து சகல உலகினுடைய சிருஷ்டியின் ஆதாரமான வேதங்களை பறித்து கடலுக்குள் புகுந்து, ஒளித்து மறைத்துவிட்டான். பிரம்மா அதிர்ந்தார். இனி எப்படி நான் எல்லாவற்றையும் சிருஷ்டிப்பேன் என்று கலங்கி நின்றார். ஸ்ரீமன் நாராயணன் விழித்தார்.

பிரம்மனை நோக்கினார். மச்சம் எனும் மீன் உருவத்தை எடுத்தார். அதன் வாலின் அசைவு பிரளய நீரையே கலைத்தது. அந்த மச்சத்தின் உடலில் தோன்றிய ஒளியும், வசீகரமும் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், இதை அழிக்க வேண்டுமென வெறியோடு அருகே வந்தான் ஹயக்ரீவன். மச்சாவதாரமெடுத்த பகவான் அவனை அழித்து வேதங்களை மீட்டார். வேதங்களின் அருமையை புரிந்து அதை கவர்ந்த அசுரன் எம்பெருமானோடு கலந்தான்.

இவ்வளவு மகிமை வாய்ந்த மச்ச மூர்த்தி ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேத நாராயண சுவாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் திருத்தலம் இது. இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும்.

மூலவராக தனி சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. மூலவர் வேதநாராயணப் பெருமாள், தேவி – பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை. திருவள்ளூருக்கு அருகேயுள்ள ஊத்துக்கோட்டையிலிருந்து 35.கி.மீ. தொலைவில் நாகலாபுரம் அமைந்துள்ளது.

மகி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi