திருவரங்கத்து அரங்கன் திருக்கோயிலில் அரங்கன் முன்பாகத் திவ்வியப் பிரபந்தங்களை இசையுடன் பாடும் அரையர் ஒருவர் இருந்தார். அவர் வெற்றிலை போடும் பழக்கமுடையவர். தான் வழிபடும் சாளக்கிராமப் பெருமாளைத் தம் வெற்றிலைப் பெட்டியிலேயே எழுந்தருளப் பண்ணியிருந்தார். தாம்பூலம் போட்டுக் கொள்ளும் சில நேரங்களில் அடியவர்களிடம் அரங்கன் புகழ் பேசிய வாறே கொட்டைப் பாக்கு என்று நினைத்துச் சாளக்கிராமப் பெருமானை வாயில் போட்டுக் கொண்டுவிடுவார். பற்களால் சிறிது கடித்த பின் தாம் கடித்தது, பாக்கன்று சாளக்கிராமப் பெருமாளே என உணர்ந்து, பதறித் தம் வாயிலிருந்த பெருமாளை எடுத்து நன்னீராட்டி ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களைத் தாளத்துடன் இசைத்துக் கண்ணீர் மல்கப் பணிவன்புடன் மன்னிக்க வேண்டுவார். தம்மை மறந்த நிலையில் இவ்வாறு சாளக்கிராமப் பெருமாளைக் கடிப்பதும், பின் தவறுணர்ந்து கண்ணீர் மல்கச் சேவிப்பதும் அன்றாட நிகழ்ச்சியாயிற்று. நண்பர் ஒருவர் அவரிடம் இவ்வாறு நாள்தோறும் எச்சிற்படுத்திப் பிழைபடுவதைக் காட்டிலும் யாருக்கேனும் சாளக்கிராமப் பெருமாளை கொடுத்து விடலாமே என்றார். அரையர் அவருக்கே கொடுத்துவிட்டார். அவரும் அதைத்தாம் வழிபடும் பெருமாளுடன் எழுந்தருளச் செய்து கொண்டார். அன்றிரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, ‘அரையர் திருவாயினை எச்சிலவாய் என்று கருதினீர் அது ஆழ்வார் பாசுரங்கள் கமழும் வாய். அதுவே எமக்கு உகந்த இடம். எப்பொழுதெல்லாம் ஆழ்வார்கள் அருளிய திரு அமுதுப் பாசுரங்களைக் கேட்க ஆசை எழுகிறதோ அப்பொழுதெல்லாம் கொட்டைப் பாக்காய்த் தட்டுப் பட்டு அந்தப் பேறு பெறுவேன். ஆகவே, என்னை அவரிடம் சேர்த்து விடுக என்றார்.
சங்காழியளித்த பெருமாள்
திருப்பதி சீனிவாசப் பெருமான் சீனிவாசர் சைவ பரமானவர் எனச் சைவர் வாதிட்டனர். வைணவர்களோ அவர் வைணவ பரமானவரே என்று வாதிட்டனர். திருப்பதிப் பகுதியை ஆண்டு வந்த நாராயணன் வனத்து யாதவராயன இந்த சர்ச்சையைத் தீர்த்து வைக்கும்படி உடையவர் இராமானுஜரை வேண்டினார். இராமானுஜர் இதற்குக் கீழ்க் கண்ட தீர்வை அளித்தார். ‘‘திருமால், சிவன் ஆகியோருக்குரிய ஆயுதங்களைச் சந்நதிக்குள் வைத்துப் பூட்டிவிடுவது எனவும், மறுநாள் எந்த ஆயுதங்களை அம்மூர்த்தி ஏற்றுக் கொள்கிறாரோ அந்த ஆயுதங்களுக்குரிய மூர்த்தியாக அவர் ஏற்கப்பட வேண்டும்’’ இது இராமானுஜர் அளித்த சமரசத் தீர்வு. அவ்வாறே செய்து விட்டு மறுநாள் கதவைத் திறந்து பார்த்தபோது திருவேங்கடமுடையான் சங்கு, சக்கரங்களுடன் காட்சியளித்தார். அது முதல் திருப்பதிப் பெருமாளுக்கு அப்பனுக்குச் சங்காழியளித்த பெருமாள் எனத் திருநாமம் ஏற்பட்டது. இராமானுஜரும் திருவேங்கடமுடையானுக்குச் சங்கு சக்கரங்கள் அளித்ததனால் அவரை வேங்கடேசப் பெருமாளின் மாமனார் என்பர். ஆசாரியருள் இராமானுஜர் ஒருவருக்குத்தான் மலை மீது சந்நதியுண்டு. பெருமாளுக்குப் பத்மாவதி தேவியின் உருவமைந்த பொன் ஆரத்தை இராமானுஜர் அணிவித்தார். நெற்றியில் பச்சைக் கற்பூரம் அணிவித்தார்.