பெரு: தென் அமெரிக்க நாடான பெருவில் இன்கா பழங்குடியின சமூகத்தினரின் சூரியனுக்கு மரியாதை செலுத்தும் பாரம்பரிய ஆண்டு விழா வண்ணமயமாக நடைபெற்றது. பெருவின் கஸ்கோ நகரத்தில் உள்ளது வரலாற்று புகழ்மிக்க சஸ்கா யுவாமா தொல்பொருள் தளம். இன்கா பழங்குடியினரின் சூரிய வழிபாடு ஆண்டு விழாவையொட்டி இப்பகுதி முழுவதும் களைகட்டி இருந்தது. இன்டி ரோமி என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவை காண பெரு மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்திருந்தனர்.
பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, பழங்காக இன்கா சமூகத்தினரின் உடைகளை அணிந்தபடி ஏராளமானோர் ஒன்றுகூடி நடமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. கொண்டாட்டங்களுக்கு பிறகு இன்கா பழங்குடியினரின் பல்வேறு விதமான பாரம்பரிய மிக்க சடங்குகள் நடைபெற்றன. பின்னர் சூரிய கடவுளுக்காக ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட லாமா விலங்கினை அவர்கள் பலி கொடுத்து பிராத்தனை செய்தனர். இவ்விழாவை தங்களது முன்னோர்களுக்கு செலுத்தும் காணிக்கையாக இன்கா சமூகத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். பெருவின் முக்கிய கலாசாரத் திருவிழாவான இன்டி ரோமி விழா 1944ம் ஆண்டு பாரம்பரிய விழாவாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.