சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன பதவிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாநகராட்சி, நகராட்சிகளில் உறுப்பினர் நியமனத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் இதற்கான வேட்புமனு விநியோகம் செய்யப்படும். tnurbantree.tn.gov.in / whatsnew-ல் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 17ம் தேதி வேட்புமனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும்.
மேலும் வெளியான அறிக்கையில்; தமிழ்நாடு முதலமைச்சர் , மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரநிதித்துவம் வழங்கப்படும் என அறிவித்து சட்டமாக்கியுள்ளார்கள். இந்த அறிவிப்பானது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் சமமாக வழங்கப்பட்டு சமூக நீதியை அடைவதற்கு வழி வகுத்துள்ளது.
இதற்கான தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம் 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37 (1) (i.a)ன்படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நியமனம் செய்யப்படவுள்ள இரண்டு மாற்றுத்திறனாளி நபர்களில், தலா ஒரு ஆண் மற்றும் பெண் நபரை நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை பெருநகர சென்னை மாநகராட்சி www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் 01.072025 முதல் 17.07.2025 வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அவ்விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து ஆணையர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 17.07.2025 அன்று மாலை 3.00க்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.