* தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து கைதான வக்கீல்களால் விமர்சனம்
* குளறுபடிகளை களைந்தால் மட்டுமே வழக்கறிஞர் தொழிலுக்கு பாதகமில்லை
நாகரிகமும் கல்வியும் அடுத்த நிலைக்கு சென்று கொண்டுள்ளது. கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என தொடர்ந்து பல தலைவர்கள் பாடுபட்டு ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் கல்வி சென்றடைய பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை நோக்கி நாடு மற்றும் கல்வி சென்று கொண்டுள்ளபோது மறுபக்கம் அதை எவ்வாறு தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது என்றும், தொடர்ந்து அசல் போன்று பல போலிகள் உருவாகி அவர்களும் அசலுக்கு நிகராக போட்டி போடுகின்ற ஒரு சூழ்நிலை தற்போது சமூகத்தில் நிலவுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் மட்டுமே அதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்றபோதும் நமக்கு எதற்கு வம்பு என அனைவரும் விலகிச்சென்று விடுவதால் நாட்டில் போலிகளின் வளர்ச்சி அசுரத்தனமாக சென்று கொண்டுள்ளது. போலி மருத்துவர், போலி வழக்கறிஞர், போலி இன்ஜினியர், போலி பத்திரிகையாளர் என அனைத்து துறையிலும் போலிகள் ஊடுருவி விட்டன. ஒவ்வொரு துறையிலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில் தொடர்ந்து அனைவரும் இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலைமை நீடித்தால் ஒரு காலத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட உயர்வான தொழில்கள் அனைத்தும் காலப்போக்கில் இழிவான தொழில்களாக மாறிவிடும். எனவே போலிகளை களையெடுக்க ஒவ்வொரு துறையிலும் அந்த துறையில் உள்ள மூத்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் தற்பொழுது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. ஒருவர் தவறான சிகிச்சை அளிக்கும் போது விசாரணை மேற்கொண்டால் அவர் போலி மருத்துவர் என்பது தெரிந்துவிடும்.
ஒரு கட்டிடம் சரியான கட்டுமானம் இல்லாமல் இடிந்து விழும்போது விசாரணை மேற்கொண்டால் போலி இன்ஜினியர் இதை கட்டியுள்ளார் என்பது தெரிந்துவிடும். இதேபோன்று ஒவ்வொரு துறையிலும் போலிகளை அடையாளம் காண பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் இன்று அனைவராலும் மதிக்கக்கூடிய வழக்கறிஞர் தொழிலில் போலிகளை அடையாளம் காண்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழிலில் பல்வேறு போலிகள் ஊடுருவி விட்டதாக வழக்கறிஞர்களே ஆதங்கப்படுகின்றனர்.
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருள், மலர்கொடி. ஹரிஹரன், ஹரிதரன், சிவா, அஸ்வத்தாமன் என இதுவரை 6 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சில வழக்கறிஞர்களுக்கு இந்த கொலையில் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று பல குற்ற சம்பவங்களில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கு என்ன காரணம், மிகவும் உயர்வாகவும் தனிமனிதனின் உரிமைகளை மீட்டுத் தருகின்ற ஒரு உன்னதமான தொழிலாக பார்க்கப்பட்ட வழக்கறிஞர் தொழில் ஏன் திடீரென இவ்வளவு விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று பார்த்தால் பல்வேறு மாநிலங்களில் உள்ள சில சட்டக் கல்லூரிகளில் தரம் இல்லாமல் வழக்கறிஞர் படிப்புகள் உள்ளதாகவும் வகுப்புகளுக்கு செல்லாமல் முறையாக சட்ட படிப்புகளை மேற்கொள்ளாமல் பணம் கொடுத்து சட்டம் பயின்றது போல அவர்கள் சான்றிதழ்களை பெற்று அதனை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பார்கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு நாங்களும் வழக்கறிஞர்கள்தான் என சிலர் மார்தட்டுகின்றனர்.
பெரும்பாலும் இவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று வாதிடுவது கிடையாது. இவர்களுக்கு பெரிய அளவில் சட்டமும் தெரியாது. வழக்கறிஞர் என விசிட்டிங் கார்டு போட்டுக்கொண்டு தாங்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு அலுவலகத்தை எடுத்துக்கொண்டு மொத்தமாக 5 பேர் அல்லது 10 பேர் தினமும் காலையில் வந்து அங்கு உட்கார்ந்து அவர்களது பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று அங்கு பிரச்னைகளுக்காக வரும் பொதுமக்களிடம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு பஞ்சாயத்து பேசி வைக்கின்றனர்.
காவல் நிலையத்தில் பஞ்சாயத்து முடியாமல் ரிமாண்ட் செல்கிறது என்றால் நாங்கள் 15 நாளில் ஜாமீனில் எடுத்து விடுகிறோம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி நீதிமன்றங்களில் முறையாக சட்டம் பயின்று வாதாடும் நபர்களிடம் அந்த வழக்கை கொடுத்து வாதாட சொல்கின்றனர். அதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையையும் இவர்கள் தருகின்றனர். உதாரணத்திற்கு, சாதாரண ஒரு வழக்கில் ஒருவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை இவர்கள் வாங்குகின்றனர்.
ஆனால் முறையாக சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் அவ்வளவு பணம் வாங்குவது கிடையாது. குறைந்தது மூன்றாயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய்க்குள் அவர்கள் வேலையை முடித்து தந்து விடுவார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பஞ்சாயத்து வழக்கறிஞர்கள் வாங்கும் பணத்தில் சிறு தொகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு வழக்கை மட்டும் நடத்துகிறார்கள். நன்கு படித்த விஷயம் தெரிந்த மக்கள் தங்களது வழக்கறிஞர்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால், அடித்தட்டு மக்கள் கறுப்பு கலர் பேண்ட் வெள்ளை நிற சட்டை அணிந்து வரும் அனைவரும் ஒரிஜினல் வழக்கறிஞர்கள் என நினைத்துக் கொண்டு இன்னமும் அவர்களிடம் ஒவ்வொரு வாய்தாவிற்கும் பணத்தை கொடுத்து ஏமாந்து வருகின்றனர். பெரும்பாலும் கொலை, அடிதடி போன்ற வழக்குகளில் சிக்கும் மக்கள் அடித்தட்டு மக்களாக உள்ளனர். எனவே இவர்களுக்கு யார் ஒரிஜினல், யார் டூப்ளிகேட் என ஆராயும் அளவிற்கு பக்குவம் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரப்பினர் தற்பொழுது சமீப காலமாக அதிகரிக்க தொடங்கி விட்டனர்.
நீதிமன்றங்களில் எப்படி உள்ளே நுழைந்தால் வழக்கறிஞர்களை பார்க்க முடியுமோ அந்த அளவிற்கு சமீப காலமாக காவல் நிலையங்களில் உள்ளே நுழைந்தால் ஒரு 10 வழக்கறிஞர்களையாவது நாம் பார்க்க முடியும் என்கின்ற சூழ்நிலை வந்துவிட்டது. காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் போலியானவர்கள் என கூறி விட முடியாது. வழக்கு விசாரணை மற்றும் வழக்கின் தன்மை போன்றவற்றை அறிந்துகொள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர்.
ஆனால், காவல் நிலையத்திற்கு எந்த வழக்கு வருகிறது. அவர்களை எப்படி நாம் வெளியே அழைத்துச் சென்று பஞ்சாயத்து பேசலாம் என தினமும் காவல் நிலையத்திற்கு வரும் வழக்கறிஞர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் பெரும்பாலும் காவல் நிலையத்தில் உள்ள சில காவலர்களை பிடித்து வைத்துக் கொண்டு எங்களது கிளைன்ட் எனக் கூறி பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். போலீசாரும் வழக்கறிஞர்களுடன் விவாதம் எதற்கு என்று நினைத்து அவர்களுக்கு சில நேரங்களில் ஒத்துப்போய் விடுகின்றனர்.
சாதாரணமாக, போலீசார் அழைத்து சமரசம் பேசும் வழக்குகளை கூட இவர்கள் பஞ்சாயத்து பேசி பெரிய பிரச்னையாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். இப்படி காவல் நிலையங்களில் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு வருமானம் ஈட்டும் வழக்கறிஞர்கள் பலர் சமூக விரோத கும்பல்களோடு சேர்ந்து கொண்டு சில தவறான விஷயங்களில் ஈடுபட்டு கைதாகும் சூழ்நிலைகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. அப்படி நிகழ்ந்த ஒரு சம்பவம் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையும்.
தனது வீட்டிற்கு வரும் இளைஞர்களை படியுங்கள் சட்டம் படியுங்கள் என அவர் கூறி வந்தார். அதே சட்டம் படித்த 6 பேர் தற்போது அவரது கொலையில் கைதாகி உள்ளனர். கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், அந்த கல்வி எவ்வளவு தரமாக இருக்க வேண்டும் என்பது தற்போது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. பொதுவாக, அந்த காலத்தில் மருத்துவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் பொய் சொல்லக்கூடாது என கூறுவார்கள்.
ஏனென்றால், நாம் ஒரு தவறை செய்துவிட்டு தவறு செய்யவில்லை என வழக்கறிஞர்களிடம் கூறினால் அவர்கள் வாதிடும்போது அது நமக்கே மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். எனவே வழக்கறிஞர்களிடம் உண்மையை கூற வேண்டும் என நமது முன்னோர்கள் கூறி வந்தனர். அவ்வளவு உயர்வாக பார்க்கப்பட்ட இந்த தொழில் தற்பொழுது சில தவறான மனிதர்களால் விமர்சிக்கப்படும் சூழ்நிலைக்கு வந்துவிட்டது. சொத்து சம்பந்தமான வழக்குகளாக இருந்தாலும் சரி அல்லது குற்ற வழக்குகளாக இருந்தாலும் சரி வழக்கறிஞரை நம்பியே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்களை தெய்வமாக பார்க்கும் பொதுமக்கள் மத்தியில் தற்பொழுது சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளால் பொதுமக்களின் பார்வையும் மாறி வருகிறது. நன்கு மெத்த படித்தவர்கள் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படுவது இல்லை. காலை காரில் ஏறினோம், நீதிமன்றத்திற்கு சென்றோம், அவர்களது வழக்குக்காக வாதாடினோம், மீண்டும் வீட்டிற்கு சென்றோம் என உள்ளனர்.
தங்களது தொழிலில் உள்ள சிறிய அளவிலான குறைகளை சரி செய்ய அவர்கள் முன்பே முற்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது, இப்பவும் போலி வழக்கறிஞர்கள் பிரச்னைக்கு முடிவு கட்டவில்லை என்றால் வருங்காலத்தில் உண்மையான வழக்கறிஞர்களுக்கு எது போன்ற பிரச்னை ஏற்படும் என்பதை யூகித்து பார்க்க முடியவில்லை.
அனைவராலும் மதிக்க கூடிய உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் எதனால் ஏற்பட்டது, யார் இதற்கு காரணம் என்பதை கண்டிப்பாக வழக்கறிஞர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே போலி வழக்கறிஞர்கள் விவகாரத்தில் சட்டம் படித்து பொதுமக்களை காக்கக்கூடிய பொறுப்பில் உள்ள வழக்கறிஞர்கள் போலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
* உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: சட்டம் படிக்கும் நபர்கள் ஆந்திராவில் படிக்கிறார்களா தமிழ்நாட்டில் படிக்கிறார்களா கர்நாடகாவில் படிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. அவர்கள் எங்கு படித்தாலும் சட்டத்தை படித்து முடித்துவிட்டு அதன்பிறகு அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகளை கையாள்வதில்தான் அவர்களது திறமை உள்ளது. நீதிமன்றத்திற்கு சென்று பிராக்டிஸ் செய்யும் போது மட்டுமே அவர்கள் திறமை வெளிப்படும்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் சட்டம் படிப்பதற்கு மிகவும் குறைவாகவே பணம் வாங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு லட்சம் என மூன்று ஆண்டுகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கும் கல்லூரிகள் கூட உள்ளன. அதனால் ஆந்திராவில் மிகவும் குறைவாக கட்டணம் உள்ளது. அதனால் அங்கு செல்கிறார்கள் என்பதில் அந்த அளவிற்கு உண்மை இல்லை. ஆனால் ஆந்திராவில் அட்டனன்ஸ் எனப்படும் வருகை பதிவேடு பெரிய அளவில் பார்க்கப்படுவது இல்லை.
இதனால் வேலை செய்து கொண்டு சட்டம் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆந்திராவிற்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆந்திராவிலும் சட்டப் படிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பான் கார்டு கண்டிப்பாக கேட்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர் சட்டம் படித்ததாக தெரிவித்திருந்தார். அவர் முழு நேர பணியில் இருக்கும்போது எவ்வாறு சட்டம் பயின்று இருக்க முடியும் என்ற சர்ச்சை ஏற்பட்டது.
அதனால் தற்போது ஆந்திராவிலும் சட்டப் படிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். இதேபோன்று எந்த மாநிலத்தில் சட்டம் படித்து இருந்தாலும் அவர்கள் சட்டம் படித்து முடித்த பின்பு இரண்டு வருடத்திற்குள் ஆல் இந்தியா பார் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படும் தேர்வை எழுத வேண்டும்.
அந்த தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் தொடர்ந்து அவர்களால் வழக்கறிஞர்களாக பணி செய்ய முடியும். இரண்டு வருடத்திற்குள் இந்த தேர்வை எழுதி அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களது சட்டப் படிப்பு ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சில பேர் தேர்வு எழுதாமலேயே வழக்கறிஞர் என தங்களை தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த குளறுபடிகளை களைந்தால் வருங்காலத்தில் வழக்கறிஞர் தொழிலுக்கு எந்தவித பாதகமும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
* லேபிளுக்கான படிப்பா எல்.எல்.பி
தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட இடங்களில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்பது ஒரு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் நிறைய தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கல்லூரியில் சேர்ப்பவர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றனர். குறிப்பாக அட்டனன்ஸ் சலுகை தேர்வு, எழுதும் போது சில அட்ஜஸ்ட்மென்ட் என பல விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனால் படிப்பு வேண்டும் ஒரு லேபிள் வேண்டும் என நினைப்பவர்கள் ஆந்திராவிற்கு சென்று பணத்தை கொடுத்து எல்எல்பி என்ற ஒரு பட்டத்தை வாங்குகின்றனர். அதில் ஒவ்வொரு செமஸ்டருக்கும் எந்த தேர்வு எழுதுகிறோம் என தெரியாமல் தேர்வு எழுதுபவர்கள் கூட இருக்கிறார்கள். திருப்பதி, விசாகப்பட்டினம், அனந்தபுரம், கடப்பா உள்ளிட்ட இடங்களில் உள்ள சில தனியார் கல்லூரிகள் அதிகமாக மாணவர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
சிவில் வழக்குகள் காரணமா?
பெரும்பாலும் தற்போதைய சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது நிலம் சம்பந்தப்பட்ட சிவில் வழக்குகளில் அதிகமாக நடக்கிறது. காவல்துறையினர் சிவில் வழக்குகளில் தலையிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் நிலம் தொடர்பான பிரச்னை ஏற்படும் போது நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என பஞ்சாயத்தில் இறங்குகின்றனர்.
அவர்களுக்கு தெரிந்த அரசியல் பிரபலங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை உள்ளே வர செய்கின்றனர். எதிர்தரப்பினரை மிரட்டுகின்றனர். இவ்வாறு நிலப்பஞ்சாயத்துகளில் காவல்துறையினர் தலையீடு இல்லாமல் இருப்பதால் போலி வழக்கறிஞர்கள் தலையிட்டு அதை பிரச்னையாக்குகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீசார் தலையிடுகின்றனர்.
இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சிறு சிறு பிரச்னைகள் என ஆரம்பித்து பெரிய நிலம் தொடர்பான பிரச்னை வரை தொடர்ந்து இவர்களது லிங்க் நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு நிலப்பிரச்னைகளில் பல கொலைகளும் நடந்துள்ளன. எனவே ஆரம்பத்திலேயே நிலப் பிரச்னைகள் பஞ்சாயத்து பேசும்போது பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை உரிய முறையில் நாட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.