‘‘இலை கட்சி தலைவர், தேர்தல் நெருங்க நெருங்க உற்சாக மூடுக்கு செல்கிறாராமே உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் புதிய டெக்னிக்கை கையில் எடுத்து இருக்கிறாராம். அதாவது எல்லாருக்கும் எல்லா பதவி என்ற ரீதியில் தேர்தல் சமயத்தில் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், இலை கட்சியில் இருந்து யாரும் மாற்றுக்கட்சிக்கு சென்றுவிடக்கூடாது. அதே நேரத்தில் யாருக்கும் பதவி இல்லை என்கிற பேச்சே இருக்கக்கூடாது என்பது தானாம் இந்த திட்டத்தின் தராக மந்திரமாம். இதனால மாங்கனி நகரில் சமீபத்தில் திடீரென 120 பேருக்கு பதவி கொடுத்து அசதிட்டாராம். பொதுவாக சார்பு மன்றம் என்றால் 9 பேர் மட்டுமே நிர்வாகிகளாக இருப்பாங்க.
ஆனால் சேலத்து தலைவரோ 25 பேரை நியமித்து, இலை கட்சியினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்டுட்டாராம். ஆனால் அவரது கட்சிக்கார்களோ இன்னொரு தகவலையும் சொல்றாங்க. மலராத கட்சியில் சேர்ந்தவுடன் கேள்விப்படாத பொறுப்புகள் வழங்கப்படுது. இவ்வளவு நாளா தொண்டராகவே இருக்கோமுன்னு முணுமுணுப்பு ஏற்பட்டிருக்கு. இதனால்தான் கட்சிக்காரர்களை குஷிப்படுத்த பதவிகள் வழங்கியிருக்காரு. இதே போல மாநிலம் முழுவதும் பதவிகளை வழங்கவும் சொல்லியிருக்காருன்னு சொல்றாங்க…
இந்த செய்தி பரவியதும் தமிழகம் முழுவதும் உள்ள இலை கட்சியினர் பதவி ஆசையில் காத்திருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ தாமரை மாநில தலைவருக்கு நெருக்கமானவர் ஒருவர் சேலம்காரர் அணியில் இணைய உள்ளதால் தாமரை நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டை மாநகரை சேர்ந்த நடிகர் பெயர் கொண்டவரானவர், தாமரை கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து, அவருக்கு சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறுபான்மை பிரிவு தலைவருக்கும், பொது செயலாளருக்கும் இடையே அவ்வப்போது மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இருவரையும் மேலிடம் சமாதானம் செய்து வைத்தது. ஆனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி பொது செயலாளரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 6 மாதத்திற்கு நீக்கப்படுவதாக கடந்த 2022 நவம்பரில் அண்ணாமலை அறிவித்தார். தொடர்ந்து நடிகர் பெயரை கொண்டவர், கட்சியில் இருந்து விலகுவதாக அவரே விருப்ப கடிதம் கொடுத்தார்.
கடந்த 1 வருடமாக எந்தவித அரசியல் அசைவு இல்லாமல் அமைதியாக இருந்த வந்தவர் மீண்டும் தன்து அரசியல் பயணத்தை தொடங்க முடிவு செய்ததார். இதற்காக சேலம்காரரை நேரில் சந்தித்து இலை கட்சியில் இணைய உள்ளதாக மலைக்கோட்டை மாநகர் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தாமரை மாநில தலைவருக்கு நெருக்கமானவர் சேலம்காரர் அணியில் இணைய உள்ளதால் தாமரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்’’‘‘அணி மாறிய இலை பிரமுகருக்கு டெஸ்ட் வைத்த சேலம் இலை கட்சி தலைவரை பற்றி சொல்கிறார் விக்கியானந்தா…’’‘‘அதிகாரிகளால அரசின் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுதாமே உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ரயில்நிலையத்துக்கு பெயர்போன ஜோலார்பேட்டை ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல ரெண்டு இன்ஜீனியருங்க இருக்காங்க. இவங்க அந்த ஒன்றியத்துல இருக்குற அனைத்து ஊராட்சியிலயும் நடக்குற திட்ட பணிகளுக்கு, பில் பாஸ் செய்ய அறிக்கை அளிக்காம இழுதடிக்குறாங்களாம். எல்லாம் பர்சன்டேஜ் தான் காரணமாம். இதனால ஒரு வருஷத்துக்கும் மேலாக அந்த ஒன்றியத்துல முடிஞ்ச திட்ட பணிகள்கூட இன்னும் ஆய்வு செய்யலையாம். இப்ப முடிக்கப்பட்ட பணிகளுக்கும் ஆய்வு செய்ய அழைச்சா, எனக்கு டைம் இல்ல, நான் ப்ரீயாக இருக்குறபோது தான் வருவேன்னு மாசக்கணக்குல அலைய விடுறாங்களாம். மேலதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிஞ்சும் கண்டும், காணாமல் இருக்குறாங்களாம்.
பர்சன்டேஜ் கொடுக்குறவங்களுக்கு மட்டும் உடனே சென்று ஆய்வு செய்து பில் பாஸ் செய்றாங்களாம். ஆனா, கடன் வாங்கி திட்டபணிகளை செஞ்ச கான்ட்ராக்டர்ஸ் பில் கிடைக்காம வருஷ கணக்குல காத்திருக்காங்களாம். இதனால, பணிகள் நிலுவையில் இருக்குதாம் வளர்ச்சிப் பணிகளும் பாதிப்பு ஏற்பட்டிருக்குதாம். மாவட்ட உயர் அதிகாரிங்க விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது… அவர்களின் மேல் அரசு அதிகாரிகளின் கண் பட்டுள்ளதாம்… இதனால் விரைவில் சிக்கி சிறைக்கு செல்வார்கள் என்கின்றனர் உடன் பணியாற்றுபவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ இலை கட்சியில் அணி மாறியவரின் நிலை திரிசங்கு சொர்கத்தில் இருப்பது யாரு…’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சி ஒருங்கிணைந்து அணியாக இருந்தபோது தேனிகாரரின் தீவிர ஆதரவாளராக இருந்த குமரியை சேர்ந்த மன்னர் பெயரை கொண்டவர் அணிகள் இரண்டானபோதும் தேனிகாரரின் ஆதரவாளராகவே தொடர்ந்தார். பின்னர் தேனிகாரர் அணியை விட்டுவிட்டு சேலம்காரர் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள முயன்றார். ஆனால் சேலம்காரரோ கடைசி வரை வாய்ப்பு வழங்காமல் இருந்தார்.
இதை அறிந்து தேனிகாரரும் அவரை தனது அணியில் இருந்து நீக்கினார். கடைசியில் கடிதம் மூலமாகவும், நேரிலும் மன்னிப்பு கேட்டபின்னர்தான் மீண்டும் கட்சியில் சேலம்காரர் இணைத்துக்கொண்டாராரம். அதனையே அறிக்கையாகவும் அவர் வெளியிட்டாரம். ‘தலைவர் இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட், முன்பு மாவட்ட செயலாளராக இருந்தார் என்றாலும் மன்னிப்பு கேட்ட பிறகுதான் கட்சியில் சேர்த்துக்கொண்டார் என்றால் பாருங்களேன், என்று இலைகட்சியினர் சேலம் காரரை புகழ்ந்து வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.