பென்னாகரம் : அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதால், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக காவிரி ஆற்றில் குறைந்ததையடுத்து, சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 8000 கனஅடியாக குறைந்ததால் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாகவும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கினர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும், மீன் சமையலை ருசித்தும் மகிழ்கின்றனர். கடந்த வாரங்களில் நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பரிசல் ஓட்டிகள், மாசஜ்செய்யும் தொழிலாளர்கள், சமையல் செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தொடர் மழையின் காரணமாக, தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் வகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் குளித்து விட்டு, குடும்பத்தினருடன் அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கண்டு ரசித்தனர். நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் சோளக்காடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.