கம்பம்: நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இதன் அருகே பூதநாராயணர் கோயில், மற்றும் சுருளி வேலப்பர் கோயில் உள்ளது. புண்ணிய ஸ்தலமாக இருப்பதால் அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். விடுமுறை நாட்களில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை வனப்பகுதி, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் மழை பெய்யும் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் (ஜூன் 26) அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அருவிக்கு நீர் வரத்து சீரானது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுருளி அருவி வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுமதி சீட்டு பெற்று கேட்டைக் கடந்து அருவியில் குளிப்பதற்காக சென்றனர்.