*பெண்ணாடத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
விருத்தாசலம் : கடலூர் எஸ்பி அனுமதியுடன் பெண்ணாடம் காவல் நிலையத்தில் 4 வயது சிறுவன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினான். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் அபுதாஹிர்.
இவரது மகன் அய்லான்அய்யத்(4). இவரது நான்காவது பிறந்தநாள் விழாவை வீட்டில் கொண்டாடுவதற்கு பெற்றோர் தயாராகி இருந்தனர். அப்போது சிறுவன் காவல் துறை அதிகாரிகளுடன் காவல் நிலையத்தில் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என தந்தையிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து அபுதாஹிர் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமனிடம் அனுமதி கேட்டு விருப்பத்தை தெரிவித்தார். தொடர்ந்து கடலூர் எஸ்பி விஜயகுமார் அனுமதியுடன் அய்லான் அய்யத் சிறுவனுக்கு பெண்ணாடம் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பின் நேற்று மாலை அய்லான் அய்யத் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடி அனைத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
போலீசார் சிறுவனை வாழ்த்தி மகிழ்ச்சி தெரிவித்து பரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்கியராஜ், கணேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் கோதண்டபாணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். காவல் நிலையத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி சிறுவனின் ஆசையை போலீசார் நிறைவேற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.