Saturday, December 9, 2023
Home » வலிக்கு பர்மனன்ட் தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!

வலிக்கு பர்மனன்ட் தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

உடலினில் ஏதேனும் வலி தோன்றிய பிறகுதான் நாம் நமது உடலினை பற்றி அக்கறை கொள்கிறோம். அதுவரை எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு நமது உடலிற்கு நாமே வெவ்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கிறோம். அப்படி வலி வரும்போது எந்த மருத்துவத்தை நாடுவது, எதில் முழு தீர்வு கிடைக்கும் என குழப்பங்கள் நேரலாம். சிலருக்கு வேறு சிகிச்சை எடுத்துக்கொள்வதால் வலி குறையாமல் நேரம் மட்டுமே செலவாகி இருக்கும்.

எனவே வலி வந்தால் எந்த வகை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்? இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு என்ன? எவ்வகை சிகிச்சை முறைகளை தவிர்க்கலாம் எனப் பல குழப்பமான கேள்விகளுக்கு இங்கே விழிப்புணர்வு கொண்ட பதில்களை கண்டு தெளிவோம்.

மற்ற மருத்துவங்கள்…

1. சித்தா மற்றும் ஆயுர்வேதம்

நவீன சித்த மருத்துவத்தில் இன்று மாத்திரை வடிவில் நிறைய மருந்துகள் கிடைக்கின்றன. அது இல்லாமல் மருத்துவப் பொடிகள், லேகியம், எண்ணெய் என பல வகைகள் உண்டு. மருத்துவ குணம் கொண்ட எண்ணெய்களை வைத்து நீவி விடுவது (Massage), குளியல் என ஆயுர்வேத சிகிச்சை முறைகளை பற்றியும் நாம் அறிவோம்.

2. அக்குபங்சர்

அந்தந்த உறுப்பிற்கு ஏற்றவாறு உடலில் அக்குபங்சர் புள்ளிகள் இருக்கும். அதில் சிறு ஊசிகள் போன்றவற்றை குத்தி மருத்துவம் செய்வர்.

3. வர்மா

வர்ம கைக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டும், கைகளை கொண்டும் உரிய இடத்தில் உள்ள வர்ம புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பது, நீவுவது போன்ற உத்திகள் (techniques) வழியாக மருத்துவம் செய்வர்.

4. ஆங்கில மருத்துவம்

மாத்திரை மருந்துகள் போன்றவற்றின் மூலம் வலியினை குறைக்க செய்வர். எந்தவித மருந்துகளும் கை கொடுக்கவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்வதை தீர்வாக வழங்குவர்.

5. வேறு சில

மேலே சொன்னவை தவிர்த்து இன்று நவீன சிகிச்சை முறைகள் ஏராளம் வந்துவிட்டன. இவ்வகை மருத்துவங்களும் வலியினை குறைப்பதற்கு உதவும்.

இவைகளின் ஒற்றுமை…

மேலே குறிப்பிட்ட எல்லா மருத்துவ வகைகளிலும் வலியினை குறைக்க முறையான சிகிச்சை வழங்குவர். இதனால் வலியும் குறையும். ஆனால், இவை அனைத்தும் வலியினை மட்டுமே குறைக்க உதவும். ஏன் வலி வருகிறது எனக் கண்டறிந்து, மீண்டும் வராதவாறு அதனையும் சரி செய்வதில்லை. அதனால் இவ்வகை மருத்துவம் எடுத்து வலி குறைந்தபின் மீண்டும் சில மாதங்கள் கழித்து வலி வருவதனை பார்க்கிறோம்.

இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு…

இயன்முறை மருத்துவம் ஆங்கில மருத்துவத்தின் கீழ் வரும் என்றாலும் மாத்திரை, மருந்துகள் வழங்க மாட்டார்கள். இயன்முறை மருத்துவ உபகரணங்கள் கொண்டும், கைகளால் நீவி விடுவது போன்ற உத்திகளை (Hands – on techniques) கொண்டும் வலியினைக் குறைப்பர். மேலும் ஏன் வலி வருகிறது, எந்த தசைகளால் வலி வருகிறது என்பதனையும் கண்டறிந்து அவற்றையும் சரி செய்வர். இதனால் எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, மீண்டும் வலி வராது. உரிய உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றுத்தந்து அதனையும் தொடர்ந்து செய்யச் சொல்வர். ஆகையால் வலி முற்றிலும் வராது.

எந்த ஒரு வலியிலும் அறுவை சிகிச்சையினை இறுதிக் கட்டமாகவே மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அப்படி அறுவை சிகிச்சை செய்தாலும் அதன்பின்பும் முறையாக இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே அறுவை சிகிச்சையின் முழுப்பலன் கிடைக்கும். இல்லையெனில் அறுவை சிகிச்சை செய்தும் எந்தப் பலனும் இல்லை.

என்ன தீர்வு…?

எந்த சிகிச்சை முறை நமக்குப் பிடித்திருக்கிறதோ அதனை நாம் தேர்வு செய்து வலியினை குறைக்க தீர்வு காணலாம். ஆனால், மீண்டும் வராமல் இருக்க இயன்முறை மருத்துவரின் ஆலோசனை படி உடற்பயிற்சிகள் செய்து வருவது அவசியம். மேலும் இயன்முறை மருத்துவத்தில் மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் போன்று பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எந்தவிதமான மருத்துவமும் இல்லையென்பதால் எல்லா வகையிலும் சிறந்ததொரு மருத்துவமாகும் என்பதனை நாம் அறிய வேண்டும்.

கூடவே, வலி வருவதற்கு முன்பே இயன்முறை மருத்துவர் ஆலோசனை படி நாம் உடற்பயிற்சிகள் செய்துவந்தால் பின்னாளில் வரும் வலியினையும் முன்னமே தடுக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.எனவே, வலியே பல பிரச்னைகளின் முதல் அறிகுறி என்பதால், வலி வந்ததும் தாமதிக்காமல் தக்க தீர்வுகளை உடனே எடுத்து நம் உடல் நலனை நாம் பேணிக் காக்கவேண்டியது மிக அவசியம்.

தொகுப்பு: மகி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?