சின்னமனூர்: சின்னமனூரில் முதல் போகம் நெல் நடவு பணிகளுக்கு முன்னதாக நாற்றங்கால் பாவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி தமிழக அரசின் உத்தரவின் பேரில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு பாசன நீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டு தொடர்ந்து ஒரு வாரமாக கடந்து வருகிறது. அதனையடுத்து சின்னமனூர் பகுதியில் சுமார் 4000 ஏக்கர் அளவில் இங்கு இரு போக நெல் சாகுபடி விவசாயம் தவறாமல் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குச்சனூர், துரைசாமிபுரம், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்து வரும் பெரியாற்று நீரால் ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய துணை வாய்க்கால்களிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டு வயல்வெளிகளில் முதல் போக நெல் நடவிற்கு நாற்றுகள் கிடைக்க முன்னதாக நாற்றங்கால் பாவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சரியாக 25 நாட்களில் வளர்த்தெடுக்கும் இந்த நெல் நாற்றினை முதல் போகதிற்கான நடவு பணிகளை இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் துவக்குவர். மேலும் முன்னதாக விவசாயிகள் வயல்வெளிகளில் டிராக்டரின் மூலம் மண்ணைப் புரட்டி போட்டு இயற்கை உரம் கலந்து தயார்படுத்தும் பணியும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது.