ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அரசு செயலாளர் தலைமையில், ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஜெகநாதனின் பதவிக்காலம் முழுக்க மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
அரசின் உரிய அனுமதி பெறாமல், ஆதாயம் பெறும் வகையில் அறக்கட்டளை தொடங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து சந்தித்து, ஆறுதல் கூறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பதவி காலம் முழுக்க ஆளுநருக்கு மிகப்பெரிய விசுவாசியாகவும், தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் செயல்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தை ஓராண்டு நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டார்.
பதவி நீட்டிப்பு காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி துணைவேந்தர் ஜெகநாதன் பணி நிறைவு பெற்றார்.இந்நிலையில், வழக்கமான நடைமுறையின்படி, ஆட்சி குழுவை கூட்டி நிர்வாக குழுவை அமைக்காமல், தன்னுடைய ஆதரவாளரான தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பெரியசாமியை, பொறுப்புத் துணைவேந்தராக துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்தார். உரிய விதிமுறைகளையும், அரசின் வழிகாட்டுதல்களையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்நிகழ்வினை கண்டித்து, கடந்த ஒரு வார காலமாக பெரியார் பல்கலைக்கழகத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பெரியசாமி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நிர்வாகப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுப்பிரமணி, தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய மூவர் குழுவினை அமைத்து, தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் தரப்புக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உயர்கல்வியில் குறிப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் இந்த நேரத்தில், பெரிய குழப்பங்களை தவிர்க்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் சுப்பிரமணி பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்.
தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மைய இயக்குனராகவும், இதழியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வரும் இவர், பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும், மக்கள் தொடர்பு அலுவலர், கலைஞர் ஆய்வு மைய இயக்குனர் என 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக பதவிகளையும் பேராசிரியர் சுப்பிரமணி வகித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி, மற்றொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகள் நீங்கி, பல்கலைக்கழகத்தில் கல்வி சார் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
* அச்சுறுத்தப்பட்ட பேராசிரியர் தேர்வு
நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சுப்பிரமணி, முந்தைய துணைவேந்தர் மற்றும் குழுவால் புறந்தள்ளப்பட்டவர். இவர் எழுதிய 2 புத்தகங்களுக்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மிரட்டப்பட்டவர். அதையும் மீறி, கலைஞர் ஆய்வு மைய இயக்குனராக திறம்பட பணியாற்றி வந்தார். மற்றொரு உறுப்பினராக தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.