சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, பல்கலைக்கழக நிர்வாகம், கடந்த 2019ல் தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், பொதுச்செயலாளர் சக்திவேல், அமைப்புச் செயலாளர் கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்தது. அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு 4 பேரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை தொழிற்தீர்ப்பாயத்தில் பணிநிரந்தர வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த ஆணையத்தின் முன்அனுமதி பெறாமல், பணிநீக்கம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல், பல்கலைக்கழகத் தலைமை நிர்வாகிகளான ஜெகநாதன் மற்றும் பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்குத்தொடரும்படி தொழிலாளர் நல ஆணையரிடம் முறையிட்டார். இதன் அடிப்படையில் கடந்த மாதம் இருதரப்பினரின் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
அப்போது, ஆவணங்களை சரிபார்த்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பொறுப்பு பதிவாளர் பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கினர். குறிப்பாக, தொழிற்தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 34(1)-ன் கீழ் உரிய நீதிமன்றத்தின் முன்பு குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த தொழிலாளர் துறை அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன், மாஜி பதிவாளர் பாலகுருநாதன் மற்றும் வழக்கு தொடர்ந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோருக்கு, சம்பந்தப்பட்ட அரசாணை நகலை நேரில் வழங்கினர். இதனையடுத்து விரைவில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் பாலகுருநாதன் மீது வழக்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.