கூடலூர்: பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. தற்போது இக்குழுவின் தலைவராக ஒன்றிய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் விஜயசரண் உள்ளார். இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் நேற்று பெரியாறு அணையின் மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, அணையின் கசிவு நீர் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் அவர்கள், ‘‘பெரியாறு அணையின் 1, 3, 6, 10 ஷட்டர்களை இயக்கி பார்த்தோம். இயக்கம் சீராக இருந்தது. தற்போதைய நீர்மட்டமான 120.05 அடிக்கு தகுந்தவாறு கசிவு நீர் அளவு 32.496 லிட்டர் என மிகவும் துல்லியமாக இருந்தது. எனவே, பெரியாறு அணை பலமாக உள்ளது’’ என திருப்தி தெரிவித்தனர்.