ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், வேலப்பாக்கம், வடமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை 950 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை அப்பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.
தேங்கிய மழைநீரில் நடந்துதான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்குகிறார்கள். இதனால் பள்ளி வளாகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இந்நிலையில் மழை காலங்களில் அதிகளவு மழை பெய்தால், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கும் மழைநீர் வெளியேறுவதற்கு வழியில்லை. எனவே மழை காலங்களில் மழை நீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும். தற்போது பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.