ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சியில், சேதமடைந்து மாட்டு தொழுவமாக மாறிய பள்ளி கட்டிடத்தை சீரமைத்து, அரசு கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம், யாதவர் தெருவில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பள்ளியில் கன்னிகைப்பேர், ஜெயபுரம், மதுரவாசல், அழிஞ்சிவாக்கம், நெய்வேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள், 6 முதல் 10ம் வகுப்பு வரை படித்து வந்தனர்.
இங்குள்ள, பள்ளி கட்டிடம் ஓடுபோட்ட வகுப்பறைகள் என்பதால், கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்து காணப்பட்டது. இதனால், சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையின்படி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கன்னிகைப்பேர் கிராம எல்லை பகுதியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு வரை புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர், யாதவர் தெருவில் இருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும், பழைய கட்டிடம் தற்போது பழுதடைந்து ஆடு, மாடுகள் கட்டும் தொழுவமாக மாறிவிட்டது.
இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் சூதாட்டம், மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக, பழைய உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் மின்வாரிய அலுவலகம் அல்லது மருத்துவமனை, விஏஒ அலுவலகம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, கிராமசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.