ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியில் சென்டர் மீடியனில் மோதி கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் யாதவ் (25) என்பவர் மும்பையில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு சென்னை தண்டையார்பேட்டை நோக்கி கன்டெய்னர் லாரியை நேற்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டி வந்தார்.
அப்போது சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான பெரியபாளையம் எல்லை முடிவில் சென்றபோது கன்டெய்னர் லாரி சென்டர் மீடியனில் பயங்கர சத்தத்துடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பிரதீப் யாதவ் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் மற்றொரு டிரைவரான பிரகாஷ் (20) என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். லாரி சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். இதுகுறித்து வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், ஜனப்பன் சத்திரம் முதல் சூளைமேனி வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த சென்டர் மீடியனில் மாதத்திற்கு 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தை தடுக்க சென்டர் மீடியன் பகுதியில், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதற்காக ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் விரைவில் பெரியபாளையம் பகுதியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.