ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சுவர் மீது கார் மோதிய விபத்தில், சென்னை வாலிபர் பரிதாபமாக பலியானார். மேலும் குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரத்திலக் (29). இவருக்கு சவுமியா (23) என்ற மனைவியும், 9 மாத கைக் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பாரத் திலக், தனது தாய் சகிலா (50) மற்றும் மனைவி, குழந்தையுடன் காரில் திருவள்ளூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, தாமரைப்பாக்கம் வழியாக தண்டையார்பேட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வாணியன் சத்திரம் பகுதியில் சென்றபோது, தனியார் கம்பெனி சுவரின் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரை ஓட்டிவந்த பாரத்திலக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய், மனைவி, குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார், பாரத்திலக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.