ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் அஞ்சாத்தம்மன் கோயில் கூட்டு சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு புதுப்பாளையம், மங்களம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வந்து சென்னை உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை ஏற்று, பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படடன. எனினும், இந்த உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் எரியாமல் எவ்வித பயன்பாடும் இன்றி பரிதாபமாக காட்சியளித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் விபத்துகளும் பல்வேறு குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும், 2 உயர்கோபுர மின்விளக்குகளை சுற்றிலும் முட்புதர் காடுகள் வளர்ந்துள்ளன. அதிலிருந்து பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ ஜந்துக்கள் வெளியேறி பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பயணிகளை பயமுறுத்தி வருகின்றன.
எனவே, குமரப்பேட்டை ஊராட்சியில் எரியாத 2 உயர்கோபுர மின்விளக்குகளால் விபத்து அபாயங்கள் அதிகரிப்பதற்கு முன்பு, இங்குள்ள உயர்கோபுர விளக்குகளை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், அங்கு மக்களின் பாதுகாப்புக்கு போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சமபந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.