பெரணமல்லூர் : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த தடம் எண் 7 என்ற டவுன் பஸ் செய்யாறு நகரில் இருந்து மேல்நாகரம்பேடு, கொருக்காத்தூர், வாழைப்பந்தல் வழியாக ஆரணி நகருக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு செய்யாறில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த டவுன் பஸ் ஆரணிக்கு கிளம்பியது. பஸ்சில் கண்டக்டர் ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம்(55), டிரைவர் தொழுப்பேடு கிராமத்தை சேர்ந்த குப்பன்(60) ஆகியோர் பணியில் இருந்தனர்.
தொடர்ந்து, இந்த பஸ் தொழுப்பேடு சென்று மேல்நாகரம்பேடு வழியாக திரும்பியபோது, அங்கு கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் சாலை குறுக்கே கவிழ்ந்து கிடந்தது. எனவே, வாழைப்பந்தல் கூட்ரோடு வழியாக டிரைவர் பஸ்சை திருப்பினார்.
அப்போது, பஸ்சில் இருந்த சில கல்லூரி மாணவர்கள், ஏன் இந்த வழியாக செல்கிறீர்கள், நாங்கள் எப்படி ஊருக்கு செல்வது? என கேட்டு வாக்குவாதம் செய்தனர். கண்டக்டர் நிலைமையை எடுத்து கூறியும் கேட்காத மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டே பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பின்னர், அந்த மாணவர்கள் திடீரென பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல் எடுத்து வீசிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. ஆனால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கல்லூரி மாணவர்களின் இந்த செயலால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து, டிரைவர் பஸ்சை பெரணமல்லூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச்சென்று, கல் வீசி பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்தியதில் பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் செய்யாறு அரசு கல்லூரியில் படிக்கும் மேல்நாகரம்பேடு கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் செய்யாறு ஐடிஐ மாணவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் 4 மாணவர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யாறில் இருந்து போளூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் சிலர் கூச்சலிட்டு கொண்டும், பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவந்து மீண்டும் ஏறிக்கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்பாடுத்தினர். இதுகுறித்து கண்டக்டர் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.