பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே ஒரே செடியில் விளைந்த 13 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் மற்றும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர் லாடபுரம் ஊராட்சி சரவணபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கரன் மகன்கள் வெங்கடேசன்(30), ராமகிருஷ்ணன் (27), ஹரி கிருஷ்ணன் (25) ஆகிய பேர் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள தங்களின் 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் வயல் வரப்பு ஓரங்களில் வீட்டு தேவைக்காக மரவள்ளிக்கிழங்கும் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் 10 அடி உயரத்திற்கு மரவள்ளி செடி வளர்ந்திருந்தது. இதில் மழை பெய்ததால் கிழங்கு உடைபடாமல் அப்படியே வெளியே வந்தது. இதனைபார்த்த ஹரிகிருஷ்ணன், அந்த மரவள்ளி கிழங்கை தூக்க முடியாமல் திணறினார்.
இவருக்கு உதவியாக ராமகிருஷ்ணனும் சேர்ந்து தூக்கினார். இதில் பல்வேறு கிளைகளாக இருந்த கிழங்கு கொத்து, 13 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதைக்கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர். பொதுவாக ஒரு செடியில் 4 முதல் 5 கிலோ எடையிலான கிழங்குகள் இருப்பதே வழக்கம். ஆனால் இந்த செடியில் மூன்று மடங்கு அதிக எடை கொண்ட கிழங்குகொத்து விளைந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள், மரவள்ளி கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.