Monday, March 4, 2024
Home » ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் 22ம் தேதி வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் அயோத்திக்கு பொதுமக்கள் வரவேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் 22ம் தேதி வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் அயோத்திக்கு பொதுமக்கள் வரவேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

by Arun Kumar

அயோத்தி: வருகிற 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக நேரில் வரவேண்டாம். வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று வருகை புரிந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக அயோத்தி வந்தடைந்தார். சாலை நெடுகிலும் திரண்டு இருந்த பொதுமக்கள் மலர் தூவியும் பாஜ கொடிகளை ஏந்தியும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரதமர் வருகையொட்டி ஆங்காங்கே கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அயோத்தி வந்தடைந்த பிரதமர், ரூ.240கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய விமான நிலையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.15,700கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் நினைவிடத்தை பார்வையிட்டார்.இதனை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக இந்த உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. விழாவில் பங்கேற்பதற்கு சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு நாளை காண்பதற்கு அவர்கள் வர வேண்டும். மற்றவர்கள் அதன் பின்னர் கோயிலுக்கு வரலாம். பொதுமக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரும் அயோத்தி வருவது என்பது சாத்தியமில்லை. எனவே நீங்கள் அனைவரும் அயோத்தி வரவேண்டாம் என்று கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தீபாவளியாக கொண்டாடுவதற்காக பொதுமக்கள் அனைவரும் 22ம் தேதி தங்களது வீடுகளில் ராம் ஜோதி ஏற்றுங்கள். அப்போது தான் நாடு முழுவதும் மகிமை நிரம்பி வழியும். ஜனவரி 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை புனித தலங்கள் மற்றும் கோயில்களில் தூய்மை இயக்கத்தை மேற்கொள்ளுங்கள். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் வலிமையானது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்” என்றார்.

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi