சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாராஷ்டிர மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது.
விசாரணைக்கு பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அத்தகைய அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வறுமையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மோடி பேசியிருக்கிறார். இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உலக வல்லரசுகளின் வரிசையில் முன்னிலைப்படுத்தி சாதனை படைத்ததில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு பெரும் பங்குண்டு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.