நெல்லை : நாங்குநேரியைச் சேர்ந்த 93 வயது மூதாட்டியை பராமரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மக்கள் குறை தீர்க்கும் நாளில் நேற்று முன்தினம் மனு அளித்த நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(93). தற்போது களக்காடு சுப்பிரமணியபுரம் அருகே வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே அமர்ந்திருந்த அவரிடம், வருவாய்த்துறையினர் நேரில் வந்து மனு பெற்றனர். அவர் தான் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் 4முறை கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றார்.
மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டு பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், ரூ.1000 கொடுத்து ஆட்டோவில் கொக்கிரகுளத்திற்கு அனுப்பி வைத்தார். மனு குறித்து உடனடியாக விசாரிக்க நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணனுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் கூறியிருப்பதாவது:நாங்குநேரி தாலுகா, இறைப்புவாரி கிராமம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி பேச்சியம்மாள்(93) குடும்ப பிரச்சினையால் ஆதரவற்று இருப்பதாக உதவி கோரி மனு அளித்துள்ளார். நேற்று காலை அவரை நாங்குநேரி தாசில்தார் சந்தித்து அவருக்கு அரசு மூலம் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகள் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். குடும்பத்தினருடன் கலந்து பேசிவிட்டு வருவதாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் அவரை பராமரிக்க முன்வந்தால், பேச்சியம்மாள் விருப்பத்தினை கேட்டு உரிய பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது மகன் மகாராஜன், வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிகிறார். பரப்பாடியில் இருசக்கர வாகன கேரேஜ் வைத்திருக்கும் பேரன் சுடலைமணியின் பராமரிப்பில் வாழ்ந்த இவர், கடந்த 8 மாதமாக குடும்ப பிரச்னையால் 2வது மகள் தளவாய் அம்மாள் பராமரிப்பில் உள்ளார்.
மும்பையில் கணவருடன் வசித்து வந்த தளவாய் அம்மாள், 8 மாதமாக இறைப்புவாரி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி தாயை பராமரித்து வருகிறார். பேச்சியம்மாளுக்கு சொந்தமாக திசையன்விளை தாலுகா, கண்ணநல்லூரில் 90 சென்ட் நிலம் உள்ளிட்ட சில சொத்துக்கள் தொடர்பாக குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனைத்து ஆவணங்களையும் பெற்று பரிசீலனை செய்து அனைத்து தரப்பையும் விசாரித்த பிறகு விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சியம்மாளை பராமரிக்கவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.