சத்ரபதி சம்பாஜிநகர்: ஜால்னா மாவட்டத்தில் உள்ள பர்தூர் தொகுதியில் புதன்கிழமை அரசு திட்ட விழா நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அந்த தொகுதி பாஜ எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர் பேசியதாவது: சமூக வலைத்தளங்களில் எங்களையும் எங்கள் கட்சியையும் பலர் விமர்சிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் இதை செய்கின்றனர். எங்களை விமர்சிப்பவர்களின் தாய்மார்களுக்கு நாங்கள் உதவித்தொகை வழங்குகிறோம். அவர்களின் தந்தை க்கு ஓய்வூதியம் கொடுக்கிறோம். உங்கள் விளைநிலங்களுக்கு பிரதமர் மோடி ரூ.6,000 வழங்குகிறார்கள். உங்கள் சகோதரிகளுக்கு லட்கி பகின் திட்டத்தில் உதவித்தொகை வழங்குகிறோம். நீங்கள் உடுக்கும் உடை, காலில் போடும் காலணி, பேசும் மொபைல் போன் எல்லாம் எங்களால் கிடைத்தது தான்.
இவ்வாறு அவர் பேசினார். லோனிகர் பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் சிவசேனா கட்சி எம்எல்சி அம்பாதாஸ் தன்வே ‘ஜனநாயக நாட்டில் இது போல திமிராக பேசுவது நல்லதல்ல. உங்கள் எம்எல்ஏ பதவி மக்களால் தான் கிடைத்தது. நீங்கள் அணியும் உடைகள், காலணிகள், நீங்கள் விமானத்தில் பயணிக்கும் டிக்கெட் செலவு, காரில் போடும் டீசல் கூட மக்களால் கிடைத்தது தான். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் லோனிகரின் இத்தகைய பேச்சை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.