சென்னை: சங்கிகள்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி தெரிவித்துள்ளார். இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; எல்.முருகன், பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த நினைத்தார்.
அவரது வேல் யாத்திரைக்கு பிறகுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கிக் காட்டினார். அதன் பிறகு அண்ணாமலை, ஆன்மிகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வழியில் தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என காவடி எடுத்து பார்த்தார். காலில் செருப்பு அணியாமல் நடந்து பார்த்தார். ஆனால் தமிழக மக்கள், 40 தொகுதிகளும் திமுகவிற்கு என விடை அளித்தார்கள்.
தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற திராவிட மாடல் ஆட்சி, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி போல் எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள். இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது. மதுரை மண்ணின் மக்கள் ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.