Sunday, July 14, 2024
Home » மக்கள் ஏற்க மாட்டார்கள்

மக்கள் ஏற்க மாட்டார்கள்

by Ranjith

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம்ேததி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதியில் வரும் ஜூலை 10ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக அன்னியூர் சிவா, பாஜ கூட்டணியில் பாமக வேட்பாளராக அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயா நிறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், திமுக கூட்டணி, பாஜ கூட்டணி, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் மக்களை சந்திக்க ஆயத்தமாகி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக திகழும் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அதற்கொரு சப்பையான காரணத்தையும் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. ஆனால் கடந்த தேர்தலை விட எங்கள் கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மக்களிடம் எங்கள் செல்வாக்கு கூடியுள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி. திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான். இனி எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிரடியாக கூறினார் அவர். இது ஒருபுறமிருக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர், பாஜவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற ஆழ்மனதின் ஆசையையும் வெளிப்படுத்தினர்.

அதேநேரத்தில் அதிமுகவில் ஒன்றாக இருந்த பலர், இப்போது பிரிந்து கிடப்பதுதான் கட்சியின் தோல்விக்கு காரணம். அனைவரும் மனமாச்சர்யங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்காக ஒருங்கிணைப்பு குழு ஒன்றையும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உருவாக்கியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி என்பது மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவை அனைத்திற்கும் மேலாக கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. ஒருங்கிணைப்பு குழுவினர் தன்னை சந்திப்பதற்கு நேரம் கேட்டநிலையில் அதற்கும் செவிசாய்க்கவில்லை. இச்சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதில், ‘‘நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கை போராளிகளுக்கு சமமே.

வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட உண்மையான மக்கள் பேரியக்கமாக அதிமுக இருந்தால், ஜனநாயக களத்தில் அந்த மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தயக்கம் ஏன் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி. தற்போதைய சூழலில் தன்னை சூழ்ந்து நிற்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு, தேர்தல் புறக்கணிப்புதான் என்று முடிவெடுத்துள்ளார் எடப்பாடி என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்காக சுதந்திரம், நியாயம் என்று அவர் கோடிடும் பசப்புகளை ஜனநாயகம் மட்டுமல்ல, மக்களும் ஏற்க மாட்டார்கள் என்பதே உண்மை.

You may also like

Leave a Comment

13 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi