சோழிங்கநல்லூர்: சென்னை மாநகர காவல் எல்லையில் குட்கா பொருட்கள் பதுக்கி மற்றும் கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகரம் முழுவதும் போலீசார் குட்கா பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை, அதாவது 7 நாட்களில் மாநகரம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வியாபாரிகள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 105 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 6.46 கிலோ மாவா, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.