ஐதராபாத்: தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு நவம்பர் 30ம் தேதி சட்டப்பபேரவை தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கு ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த பொது கூட்டங்களில் கேசிஆர் பேசிய போது, “விவசாயிகளுக்கு 5 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் தெலங்கானாவை பற்றி பேசுகிறார்,” என்று கிண்டலடித்து பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், “தெலங்கானாவுக்கு பல பெரிய தலைவர்கள் வருகிறார்கள். உ.பி.யில் இருந்து முதல்வர்(யோகிஆதித்யநாத்) ஒருவர் வருவார். அவரது மாநிலத்தில் உணவுக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் இங்கு வந்து அவர் நமக்கு உபதேசம் செய்வார். உ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வேலைக்காக, வாழ்வாதாரத்துக்காக தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் அம்மாநில முதல்வர்கள் நமக்கு பாடம் புகட்டுவார்கள். இதை என்னவென்று சொல்வது என புரியவில்லை,” என கடுமையாக சாடினார்.