சென்னை: ‘‘இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 1.7 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது’’ என்று சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2வது ஆண்டாக தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான அவசரகால சிகிச்சை பிரிவில் பணிபுரிய முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் 260 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை பிரிவு என்பது ஒரு தூண் போல திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி ஒருவர் பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தான் ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ என்பது அரசால் தொடங்கபட்டது. இத்திட்டத்தின் மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 5.7% இறப்புகள் குறைந்துள்ளன. அதேபோல தமிழகம் முழுவதுவம் விபத்தில் சிக்கிய 1.7 லட்சம் பேர் ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் மூலமாக அரசு மருத்துவமனை மூலம் சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை என்பது முதன்மை இடத்தில் அங்கம் வகித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைமுதல்வர் தேரணி ராஜன், துணை முதல்வர் கவிதா, சென்னை மருத்துவக் கல்லூரியில் தலைவர் பவானி, அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் கவுதமி மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவர் முகமது அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.