சென்னை: ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மேக்சிவிஷன் தனியார் கண் மருத்துவமனை குழுமம் மற்றும் தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னினையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரூ.400 கோடி முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமமாகும். இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைச் செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, மேக்சிவிஷன் நிறுவனத்தின் தலைவர் வேலு, தலைமை செயல் அலுவலர் சுதீர், தலைமை மருத்துவ இயக்குநர் ஷிபு வர்க்கீ, இயக்குநர் பெர்னார்டு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.