ஈரோடு: அதிமுகவையும் பாஜவையும் மக்கள் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து அவர் ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டி: மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக இந்துக்கள் கொங்கு மண்டலத்தில் ஜவுளி சார்ந்த தொழிலில் உள்ளனர். ஒன்றிய அரசு பருத்தி கொள்முதலை கைவிட்டதால், அத்தனை நெருக்கடியை சந்தித்துள்ளனர். அதேநேரம் கார்பரேட் பயன்பெறும் படி நடந்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து செல்லும் இயக்கத்தை, இம்மாத இறுதியில் செய்ய உள்ளோம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், நேர்மையாளருமான சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன் வந்தது. எந்த காரணமும் கூறாமல், கவர்னர் அதை நிராகரித்துள்ளார். அவர் உட்பட இந்த இயக்கத்தில் பலர் சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷனைக்கூட பெறாதவர்களாக இருந்துள்ளனர் என்பதை அவர் அறிய மாட்டார்.
பாஜவின் அனைத்து செயலுக்கும் ஆதரவு தெரிவித்து விட்டு, தேர்தல் வரும் தருவாயில் ஆதரவை வாபஸ் பெறும் அதிமுகவை மக்கள் அறிவார்கள். இவ்விரு கட்சிகளையும் ஒன்றாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். அதிமுக தனியாக வந்ததால் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும், அங்கு செல்லாது. அது போன்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அதேநேரம், திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளே இருக்கிறோம். தொகுதி குறித்து இதுவரை பேசவில்லை. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.