ராமநாதபுரம்: தேர்வான் தோட்டம் இந்திராநகருக்கு மயான வசதிக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பஞ்சாயத்தை சேர்ந்த தேர்வான்தோட்டம் இந்திரா நகரை சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘‘தேர்வான் தோட்டம் இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் மயானம் குயவன்குடி பஞ்சாயத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ளது. தற்போது இப்பகுதியில் பிளாட்கள் போடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் இந்திரா நகர் கிராமமக்கள் பயன்படுத்தும் மயானம் அரசு இடம் இல்லை. மயானமாக பயன்படுத்தக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே வருவாய் துறை கிராம கணக்கில் நீர்பிடி புறம்போக்கு என உள்ள இந்த இடத்தை வருவாய் துறையினர் மூலம் முறையாக அளவீடு செய்து மயான வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.