பெங்களூரு: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா அடைந்துள்ள டிஜிட்டல் வளர்ச்சி கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 2015ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் இந்தியா தொழில்நுட்ப துறையில் இந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடையமுடிந்தது. இந்தியாவில் 85 கோடி மக்கள் குறைவான விலையில் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே இவ்வளவு அதிகமான மக்கள் குறைவான விலையில் இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் தான். ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் யுபிஐ மூலம் ரூ.1000 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. உலகின் ரியல் டைம் பரிவர்த்தனையில் 45 சதவீதத்திற்கும் மேல் இந்தியாவில் செய்யப்படுகிறது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பாஷினி என்ற பெயரில் மொழிமாற்ற தளம் உருவாக்கப்படுகிறது. பல மொழிகள் பேசப்படும் இந்திய மக்களை ஒன்றிணைக்க இந்த தளம் உதவும். உலகில் உள்ள அனைத்து மதத்தினர் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. பண்டைய கால மரபுகள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை இந்தியாவில் அனைவருக்குமான ஏதாவது ஒன்று இந்தியாவில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
* ஜன் தன் கணக்குகள் 50 கோடியை கடந்தது
நாடு முழுவதும் ஜன் தன் கணக்குகள் எண்ணிக்கை 50கோடியை கடந்தது குறிப்பிடத்தக்க மைல்கல் என்று பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டில் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளதாகவும், அவற்றில் 56 சதவீதம் கணக்குகள் பெண்களுடையது என்றும் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. ஜன்தன் கணக்குகளில் ரூ.2.03லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 34 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜன்தன் கணக்குகளின் பாதிக்கும் மேற்பட்டவை எங்களது பெண் சக்திக்கு சொந்தமானது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 67 சதவீத கணக்குகள் கிராமப்புற மற்றும் பாதி நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு மூலையில் உள்ளவரையும் நிதி பலன்கள் சென்றடையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.