சென்னை: இந்திய மக்களை மடைமாற்றம் செய்யும் வகையில் பாஜ கையில் ஏந்திய ஆயுதம் தான் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விசிக சார்பில் ஜனவரி 26ம் தேதி திருச்சியில் நடக்கும் ‘‘வெல்லும் சனநாயகம் மாநாட்டை” ஒட்டி சமத்துவ சுடர் தொடர் ஓட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் இருந்து நேற்று துவங்கியது. இதனை விசிக தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார்.
பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீத்தாராம் யெச்சூரி, ராஜா உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். மோசமான ஆட்சியை 10 ஆண்டுகளாக நடத்திய பாஜ, திசைதிருப்பும் வகையில் மக்களை மடைமாற்றம் செய்யும் வகையில் கையில் ஏந்திய ஆயுதம் தான் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம். இவர்கள் ஆட்சி தொடர்ந்து நீடித்தால் அதானி அம்பானி குடும்பம் மட்டும் வலிமை பெறும். ஆகவே இவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவது நாட்டின் தேவையாக இருக்கிறது. அடுத்த 20 வருடத்தில் இந்தியாவை ராம ஜென்ம பூமியாக மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசி உள்ளார். இவர்களின் சதி திட்டத்தை / கனவு திட்டத்தை முறியடிக்க வேண்டும்.