குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில், ஆதிவாசி என்ற தெருவின் பெயரை மாற்றி வைக்குமாறு கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரை வழங்கினார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியபணிச்சேரி, கோவூர், தரப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த மனுவில் தெருவின் பெயர் ‘ஆதிவாசி’ என்று இருந்தது. இதனைக்கண்ட அமைச்சர் தெருவின் பெயரை தீர்மானம் போட்டு உடனடியாக மாற்ற வேண்டும் எனவும், அனைவரும் சமம். ஆதிவாசி என்றெல்லாம் பெயர் வைக்கக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து வழங்கிய மனுக்கள் அனைத்தையும் வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து விட்டு சென்றார்.