உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளத்தை சேர்ந்த மூதாட்டி ராஜாமணி கடந்த 10ம் தேதி வீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவை உடைத்து அதிலிருந்து 57 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி, கைரேகைகளின் அடிப்படையில் கூ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து(31), சரவணப்பாக்கம் உதயா (24) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களுடன் இருந்த ஞானமணி (48), சுதாகர் (32), சுபாஷ் சந்திரபோஸ் (25), கபார்தீன் (23) ஆகியோரையும் கைது செய்தனர். இதில் ஞானமணி (48) என்பவர் கடலூர் மத்திய சிறையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அவர், மூதாட்டி ராஜாமணியின் உறவினர். இவரது வீட்டின் அருகில் வசிப்பதால் அடிக்கடி தாயுடன் அங்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர் வைத்துள்ள நகைகள் மற்றும் பொருட்கள் குறித்து தெரிந்து தனது கடன் பிரச்னையை தீர்க்க அவற்றை கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு வந்தவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்கள் மூலம் இந்த கொள்ளையை அவர் அரங்கேற்றி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் வேறு ஏதாவது இதேபோன்ற கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கும்பலிடம் இருந்து 50 பவுன் நகை மற்றும் விற்பனை செய்யப்பட்ட 7 பவுன் நகைக்கான தொகை ரூ.3 லட்சத்து 20 ஆயிரம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.