ஊட்டி : ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
இடைப்பட்ட சமயங்களில் மழை அதிகமாக காணப்படாது. எனினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு சில நாட்கள் மழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கும் சற்று அதிகமாக காணப்படுகிறது.
இதனால், சில இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. குறிப்பாக ஊட்டியில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் சாலை இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களில், மண் அடித்து வரப்பட்டு சாலையில் சேர்ந்துள்ளது.
இதனால், இச்சாலையில் ஒரு சில இடங்களில் சாலை முழுக்க சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சாலையில் சேறும் சகதியும் நிைறந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து அவலாஞ்சி பகுதிக்கு நாள்தோறும் சூழல் சுற்றுலாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டள்ளனர்.
மேலும், அவலாஞ்சி மின்வாரிய குடியிருப்புக்குச் செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே நெடுஞ்சாலை துறையினர், பருவமழை தூங்கும் முன் இச்சாலையில் உள்ள சேற்றை அகற்றி சாலை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.